'ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருப்பது, பா.ஜ., தான்' சொல்கிறார் கனிமொழி

'லோக்சபா தேர்தலில் பா.ஜ., மீது மக்கள் எந்தளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது தெளிவாக தெரியும்' என தி.மு.க., எம்.பி., கனிமொழி தெரிவித்தார்.
தூத்துக்குடி, பாளையங்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ' தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த செய்திகளை, செய்தித்தாள்களில் தமிழக அரசு வெளியிடுவதில்லை. எத்தனை தடைகள் வந்தாலும் அதையெல்லாம் தாண்டி வளர்ச்சிக்கான திட்டங்களை தமிழகத்தில் மத்திய அரசு செயல்படுத்தியே தீரும்' என்றார்.
பிரதமரின் பேச்சு குறித்து கனிமொழி எம்.பி., கூறியதாவது:
தமிழகத்தின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடியிடம் எத்தனையோ திட்டங்கள் குறித்து தமிழக முதல்வர், கோரிக்கையாக முன்வைத்திருக்கிறார். ஆனால், எந்தக் கோரிக்கையையும் அவர்கள் இதுவரை நிறைவேற்றிக் கொடுத்தது இல்லை.
தமிழகத்தில் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்புக்கான நிதியைக் கூட மத்திய அரசு இதுவரை கொடுக்கவில்லை. தமிழகத்துக்கு மத்திய அரசின் திட்டங்கள் வந்தபோது, அதை எந்தக் காலத்திலும் தடுத்தது இல்லை.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் மத்திய அரசின் பணம், கால்வாசி தான். மீதி பணத்தை தமிழக அரசு தான் கொடுக்கிறது. அவர்கள் கொடுக்கும் 70,000 ரூபாயை வைத்துக் கொண்டு வீட்டைக் கட்ட முடியாது. ஆனால், அதற்கும் பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் எனப் பெயர் வைத்து ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருப்பது, பா.ஜ,. தான். அது மக்களுக்கே தெரியும்.
பிரதமர், தன்னுடைய பேச்சில் தி.மு.க என்ற கட்சியே இனி தமிழகத்தில் இருக்காது என்கிறார். இப்படி சொன்னவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் தான் காணாமல் போயிருக்கிறார்கள். தி.மு.க., இருந்து கொண்டே தான் இருக்கிறது. வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., மீது மக்கள் எந்தளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிந்துவிடும்.
அதேபோல், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தைக் கொண்டு வருவது குறித்து மறைந்த பிரதமராக இருந்த மன்மோகன் சிங்குக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியிருந்தார். இதே கோரிக்கை தொடர்பாக பார்லிமென்ட்டில் நானும் பேசியிருக்கிறேன். அமைச்சர்களை சந்தித்திருக்கிறோம். பிரதமருக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன்.
ராக்கெட் ஏவுதள திட்டத்துக்கான நில ஒதுக்கீட்டை தமிழக முதல்வர் தான் துரிதப்படுத்தினார். அதற்கான நிலத்தை வழங்கியதும் முதல்வர் தான். பட்ஜெட்டிலும் 2000 ஏக்கர் பரப்பளவில் அத்திட்டத்துக்கான தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இத்திட்டத்தைக் கொண்டு வர தமிழக அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டது.
இவ்வாறுஅவர் கூறினார்.
வாசகர் கருத்து