மடியில் கனமில்லை: ஈ.டி., ரெய்டு குறித்து ஆதவ் அர்ஜூனா

வி.சி., துணைப் பொதுச்செயலர் ஆதவ் அர்ஜூனா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை முடிந்துவிட்டது. 'எத்தனை தடைகள் வந்தாலும் என்னுடைய பணி தொடரும்' என, ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராக இருக்கும் ஆதவ் அர்ஜூனா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 'வெல்லும் ஜனநாயகம்' மாநாட்டை ஒருங்கிணைத்தார். இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் வி.சி.,யில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அவருக்கு மாநில துணைப் பொதுச்செயலர் பதவி வழங்கப்பட்டது. லோக்சபா தேர்தலில் வி.சி.,யின் பொதுத்தொகுதி வேட்பாளராகவும் அறியப்பட்டார். ஆனால், கூட்டணியில் இரு தனித் தொகுதிகளை மட்டுமே தி.மு.க., ஒதுக்கியதால், ஆதவ் அர்ஜூனாவால் களமிறங்க முடியவில்லை.
இந்நிலையில், கடந்த இரு நாள்களாக ஆதவ் அர்ஜூனாவின் சென்னை வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. இது குறித்து, தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை ஆதவ் அர்ஜூனா பதிவிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:
எனது அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்த செய்தி ஊடகங்களில் பரவலாக வெளியாகியிருந்தது. நேற்று காலை தொடங்கி இன்று காலை வரை ஒருநாள் சோதனை நடத்தப்பட்டது. பொதுவாழ்வில் வௌப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை எப்போதும் உணர்ந்திருக்கிறேன்.
அதன் அடிப்படையில் சோதனையின் போது அதிகாரிகள் கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன. சோதனையும் நிறைவடைந்துவிட்டது.
இதற்கிடையில், சமூக வலைதளங்களில் வலம் வரும் வதந்திகளுக்கும் அவதூறுகளுக்கும் யாரும் இடம் தர வேண்டாம். என் மடியில் கனமில்லை. அதனால் வழியில் பயமில்லை. அம்பேத்கர், பெரியார் வழியில் எனது பயணம் தொடரும்.
இவ்வாறு ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து