அ.தி.மு.க., கொடி, சின்னம்: பன்னீர்செல்வத்துக்கு நிரந்தர தடை

அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னம் மற்றும் கொடியை பயன்படுத்த பன்னீர்செல்வத்துக்கு நிரந்தர தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க.,வின் கொடி, சின்னம் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரனைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'சின்னம், கொடியை பயன்படுத்த தடை விதித்தால் தேர்தல் கமிஷனை அனுக முடியாத சூழல் உருவாகும்' என வாதிட்டார்.
பழனிசாமி தரப்பு வாதிடும்போது, 'ஒருங்கிணைப்பாளர் என பன்னீர்செல்வம் கூறிக்கொள்வதில் எந்த பிரச்னையும் கிடையாது, அதேநேரம், அவர் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் எனக் கூறிக் கொள்வதை எதிர்க்கிறோம். அவர், வேறு கட்சியை துவங்கி தன்னை ஒருங்கிணைப்பாளர் என கூறிக் கொள்ளட்டும்' என வாதிட்டனர்.
இதன்பின், நீதிபதி சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவில், அ.தி.மு.க.,வின் பெயர், இரட்டை இலைச் சின்னம் மற்றும் கொடி, லேட்டர்பேடு ஆகியவற்றை பன்னீர்செல்வமும் அவரது அணியினரும் பயன்படுத்த நிரந்தர தடை விதிக்கப்படுகிறது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து