பா.ஜ.,வுடன் தொடர்ந்து பேசி வருகிறோம் : ஓ.பன்னீர்செல்வம்

'பா.ஜ.,வோடு பரஸ்பர உணர்வோடு பேசிக் கொண்டிருக்கிறோம். பிரதமர் பங்கேற்ற விழாவுக்கு அழைக்காததில் எந்த வருத்தமும் இல்லை' என, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
திருப்பூர் பல்லடத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி, அடுத்து நெல்லை மற்றும் தூத்துக்குடியில் நடைபெற்ற விழாக்களில் பங்கேற்றார். பிரதமர் பங்கேற்ற பொதுக் கூட்டங்களில் பா.ஜ., கூட்டணியில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவற்றின் தலைவர்கள் பங்கேற்றனர்.
ஆனால், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க., பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் அழைக்கப்படவில்லை. இது, ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:
பா.ஜ.,வில் உள்ள மேல்மட்ட நிர்வாகிகளோடு பேசிக் கொண்டிருக்கிறோம். தேசிய கட்சியாக பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் தான் இருக்கிறோம். காலம் கனிந்து வருகிறது. எதிர்பார்க்கப்படும் பதிலை நாட்டு மக்களுக்குத் தருவோம்.
பிரதமர் பங்கேற்ற விழாவுக்கு அழைக்காததில் எந்த வருத்தமும் இல்லை. இரு தரப்பிலும் பரஸ்பர உணர்வோடு பேசிக் கொண்டிருக்கிறோம். எங்கள் கட்சியின் மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் உரிய தீர்மானங்களை நிறைவேற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து