பிரசார வாகனம் 'லேட்' அமைச்சர் 'வெயிட்டிங்'

பிரசார வாகனத்திற்காக வேட்பாளரும், அமைச்சரும் இரண்டரை மணிநேரம் காத்திருந்தனர். கடும் வெயிலில் அவதிப்பட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும்சோர்வடைந்தனர்.
சீர்காழி அருகே உள்ள அளக்குடி கிராமத்தில் பிரசாரத்தை துவக்க, காங்., வேட்பாளர் சுதா தன் ஆதரவாளர்களுடன் நேற்று காலை வந்தார். ஆனால், தி.மு.க., மாவட்ட செயலர் நிவேதா முருகனும், அவரால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரத்யேக பிரசார வாகனமும் வரவில்லை.
இதை அறிந்த சுதா, அங்கு திரண்டிருந்த தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளை கண்டு கொள்ளாமல் அருகில் இருந்த வீட்டுக்குள் சென்று அமர்ந்து கொண்டார். மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சர் மெய்யநாதன், ராமலிங்கம் எம்.பி., பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் பிரசாரத்தை துவங்கலாம் என கூறியும் வேட்பாளர் ஏற்கவில்லை.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பிரசாரத்தை துவங்காததால், தங்கள் கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் வெயிலில் அவதிப்படுவதை கண்டு கடுப்பான அமைச்சர் மெய்யநாதன், பிரசாரத்தை உடனடியாக துவங்க அறிவுறுத்தினார்.
அமைச்சரின் அறிவுறுத்தலை தவிர்க்க முடியாமல், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் வேட்பாளர் சுதா பேசி ஓட்டு சேகரித்தார். பின், இரண்டரை மணி நேரம் தாமதமாக, பிரத்யேக வாகனத்துடன் மாவட்ட செயலர் முருகன், அளக்குடிக்கு வந்ததை தொடர்ந்து, அனைவரும் அதில் ஏறி ஒருவழியாக பிரசாரத்தை துவக்கினர். கடும் வெயிலில் காத்து கிடந்த கட்சியினர் சோர்வோடு உடன் சென்றனர்.
வாசகர் கருத்து